| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் | 
| கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
 நடமாடு நன்மருகல் வைகி நாளும்
 நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
 படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
 பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
 பொடியேறு மேனியராள்ப் பூதஞ் சூழப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 1 | 
| முற்றொருவர் போல முழுநீ றாடி முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
 ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
 ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
 மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு
 மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
 புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 2 | 
| ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
 ஏகாச மாவிட்டோ டொன்நேற் திவந்
 திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
 பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
 பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
 போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 3 | 
| பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர்
 நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
 நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
 கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
 கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
 பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 4 | 
| செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் சிரமாலை சூடிச் சிவந்த மேனி
 மத்தகத்த யானை யுரிவை மூடி
 மடவா ளவளோடு மானொன் றோதி
 அத்தவத்த தேவர் அறுப தின்மர்
 ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
 புத்தகங் கைக்கொண்டு புலித்தோர் வீக்கிப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 5 | 
| நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்
 பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
 பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
 துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
 துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
 புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 6 | 
| மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
 செறியிலங்கு திண்டோள்மேல் நீறு கொண்டு
 திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி
 நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
 நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
 பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 7 | 
| நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிலைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
 கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங்
 குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
 நல்லாலை நல்லூரே தவிரே னென்று
 நரையூரிற் றாமுந் தவிர்வார் போலப்
 பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 8 | 
| விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
 திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
 திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
 அரையேறு மேகலையாள் பாக மாக
 ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
 புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 9 | 
| கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் குமரனும் விக்கின விநாய கன்னும்
 பூவாய பீடத்து மேல யன்னும்
 பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
 பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
 பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
 பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
 புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |